Wednesday, March 20, 2013

ஒரு கர்நாடக சங்கீத ரசிகனின் நினைவு அலைகள் -பகுதி 1



இது கர்நாடக சங்கீதத்தைப் 
பற்றிய கட்டுரை இல்லை. 
பொதுவாக, சங்கீதத்தைப் பற்றிக் 
கட்டுரை எழுதுபவர்கள் சங்கீத வித்வான்களாகவோ,சங்கீத சாஸ்திர மேதைகளாகவோ,விமர்சகர்களாகவோ
உயர்ந்த பதவியில் உள்ளவர்களாகவோ
தான் இருப்பார்கள். 
மேலே சொன்ன எந்தப் பிரிவுக்கும் 
நான் சொந்தக்காரன் இல்லை.

நான் வெறும் கர்நாடக சங்கீத ரசிகன் மட்டுமேரசிகன் மட்டும்தான்.
எனக்குத் தெரிந்த சங்கீதமெல்லாம் 
"கேள்வி-ஞானம்". 
தொடர்ந்து 75 ஆண்டுகளாக நடந்துகொண்டிருக்கிறது. 
இன்னும் தொடர்கிறது.

நான் உண்மையிலேயே "கொடுத்துவைத்தவன்"
இரண்டு விஷயங்களில்.

ஒன்று, கர்நாடக சங்கீதத்தின் 
பேரில் ஆர்வம் ஏற்பட்டதைப் 
பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். கர்நாடக சங்கீதம் ஒரு "Acquired taste" - அதற்கான ரசனையை வளர்த்துக்கொள்ள வேண்டும் - என்பார்கள்.
அதன் முழுப் பரிமாணத்தைக் 
கேட்ககேட்க எனக்குப் பிடித்தமான சுவையாக மாற்றிக்கொண்டேன். இப்பொழுது நினைத்துப் பார்த்தால்
இது மாத்திரம் நடக்கவில்லையானால், எப்பேர்ப்பட்ட ஒரு பொக்கிஷத்தை இழந்திருப்பேன்!

இரண்டாவது, கர்நாடக சங்கீத வித்வான்களின் ரசிகர்கள் 
பெரும்பாலும் தங்களுக்குப் 
பிடித்தமான பாடகர்கள் /பாடகிகள் மீது 
ஒரு வெறித்தனமாக பக்தியை வைத்திருப்பார்கள். 
அரசியலுக்கு அடுத்தபடியாகச் 
சண்டையில் முடிவது இரண்டு 
ரசிகர்கள் விவாதித்துக்கொள்ளும்போது. எனக்கு இந்த வெறித்தனம் வரவில்லை என்பது ஒரு மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னுடைய கலெக்ஷனில், அநேகமாக பிரபலமான, அதிகம் தெரியாத
பல வித்வான்களின் கச்சேரிகள் இருக்கின்றன.

என்வரை, எந்த சங்கீதம் நம்மை 
மெய்மறந்து "ஆஹா, அற்புதம்" என்று சொல்லத் தோன்றுகிறதோ 
அதைப் பொக்கிஷமாகப் 
பராமரிக்க வேண்டும். 
அந்த அற்புத "flash" ராகத்திலாவது, பாட்டிலாவது, ஸ்வரத்திலாவது 
ஏற்படலாம்.
அந்த "flash"களின் சங்கீத அடிப்படை தெரியாது. ஆனால் அந்த flashகளை இன்றும் நினைவுகூருகிறேன்.

எத்தனை வித்வான்கள்... எத்தனைக் கச்சேரிகள்... எந்தனை இடங்களில்... கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. 
ஆனால், சில குறிப்பிட்ட சம்பவங்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.
நான் சொல்லப் போகிற எல்லா நிகழ்ச்சிகளிலும் ஒரே ஒரு சரடுதான் பொதுவாக இருக்கும். 
அது வித்வான் - ரசிகனின் 
ஒரு அமானுஷ்யமான உறவு. 
சங்கீத உலக ஜாம்பவான்களும் சரி
புதிதாக மேடைக்குப் பாட வரும் 
இளம் பாடகர்களும் சரி
ரசிகர்களுக்காகவே பாடிவந்தார்கள், பாடிவருகிறார்கள்.

ரசிகர்களை எப்படிக் கவரலாம் 
என்பதை ஒரு "டெக்னிக்காகவே" 
கையாண்டு வந்தார்கள். எத்தனைப் பட்டங்கள் கிடைத்தாலும் ரசிகனின் அங்கீகாரத்தைத்தான் பெரிதாக நினைத்தார்கள். 
அவற்றிலிருந்து சில இதோ...